ஸ்ரீதர் ஒரு சகாப்தம் – 134 தனித்துவம் ஸ்ரீதரின் மகத்துவம் [2]

    தனித்துவம் ஸ்ரீதரின் மகத்துவம் [2]

அன்பர்களே

                           ஸ்ரீதர் பன்முகத்தன்மை கொண்டவர். எனவே அவர் பற்றிய பதிவுகள் பண்புகளை முறையாக வெளிப்படுத்த வேண்டும் அல்லவா?  இந்தப்பதிப்பில் அவரது தேடுதல்  குறித்து பேசலாம் என்றே நினைக்கிறேன் . அவரது தேடுதல் என்பது பல துறைகளையும் உள்ளடக்கியது. கிட்டத்தட்ட ஒவ்வொரு கலைஞனையும் தேடித் தேடியே  தனது நிறுவனத்தயாரிப்புகளுக்கு நன்றாக பயன்படுத்திக்கொண்டார் . இன்றைய சொல்லாடலில் சொல்வதென்றால் அவர் ஒரு மிகப்பெரிய Search Engine என்றே குறிப்பிடலாம் .அதில் வியப்பு என்னவென்றால் அவரின் தேடுதல் விளம்பரத்தின் துணைகொண்டு நிகழ்ந்து அல்ல. ஒரு விலகலாக அமைந்தது குழந்தை நட்சத்திரத்திற்கான தேடல் பற்றிய விளம்பரம் “நெஞ்சில் ஓர் ஆலயம் ” படத்திற்காக.

பிற தேடல்கள் – கல்யாணகுமார்,  முத்துராமன் , தேவிகா , நாகேஷ், காஞ்சனா , ராஜஸ்ரீ , ரவிச்சந்திரன்,  ஜெயலலிதா ,ஸ்ரீகாந்த் , மூர்த்தி, ஆஷா,  பாரதி ,விஷ்ணுவர்தன், பத்மப்ரியா, பின்னாளில் விக்ரம் என்ற  நீண்ட பட்டியல். இவர்களில் சிலர் நேரடியாக ஸ்ரீதரின் பார்வையில் வந்தவர்கள். வேறு சிலர் வாய்வழி செய்தியாக அறியப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டவர்கள். இன்னும் சிலர் நண்பர்கள் மூலம் அறிமுகம் ஆனவர்கள். இதில் நாம் கவனிக்க வேண்டியது , இத்துணை நபர்களுக்கு ஒரே இயக்குனர் வெவ்வேறு கால கட்டங்களில் வாய்ப்பளித்த வரலாறு உண்டா என்பதே.

இது ஒரு புறம் இருக்க , அவர் தொழில் நுட்பத்திறமைகளை மிகவும் ஆழ்ந்து கவனித்து முறையாக தனது குழுவில் இணைத்துக்கொண்டார் என்பது எனது பார்வை. வின்சென்ட் – சுந்தரம் ஸ்ரீதருடன் நெடிது பயணித்து பின்னர் வெவ்வேறு படங்களில் தனித்து [ free lance ] செயல் பட்டனர். அதன் பின்னர் , ஸ்ரீதர் என்.பாலகிருஷ்ணன்,  ஜி. பாலகிருஷ்ணா, யூ ராஜகோபால் , பீ எஸ் லோகநாதன்  பின்னர் திவாரி போன்ற ஒளிப்பதிவாளர்களை தேவைக்கேற்ப பயன்படுத்தினார். இதில் தேடல் எங்கே இடம் பெற்றது என்றால் இவர்களில்  பலர் தமிழ்த்திரையில்  அதிகம் செயல் படாதவர்கள். ஆனால் பிற மொழிப்படங்களில் முத்திரை பதித்தவர்கள்.

இவ்வகைக்கலைஞர்களை இனம் கண்டஸ்ரீதர் ,பெரும்  ஆளுமைகளான தம்பு, எல்லப்பா , மார்க்கஸ் பார்ட்லே, போன்றோரை ஈடுபடுத்தவில்லை. ஒருவேளை அவர்களின், தலைமை இடம் கருதி தவிர்த்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். அதே போலத்தான் அவரது பிற கலைஞர்கள் – குறிப்பாக ஒப்பனை, நிழற்படம் , நடன இயக்கம், படத்தொகுப்பு துணை இயக்குனர்கள் என பெரும்பாலும் நிரந்தர குழுவாகவே இயங்கி வந்தனர்.

இவை அனைத்தும் முழு நம்பிக்கையின் வெளிப்பாடுகள். . ஆக தேடுதல் என்பது தேவையின் நிமித்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவர் எப்போதுமே தேடுதலை விட்டவர் அல்லர். ஒரு புறம் தேடுதல் நடந்தாலும் நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டவர்களை இயன்ற போதெல்லாம் தப்பாமல் பயன்படுத்திவந்தார். உதாரணம் –  தேவிகா ,முத்துராமன், நாகேஷ், காஞ்சனா, சச்சு , எல். விஜயலக்ஷ்மி போன்றோருக்கு பல படங்களில் வாய்ப்பு தந்து அவர்கள் கால் ஊன்ற உதவினார். சில நடிகர்கள் ஸ்ரீதர் குழுவினர் படங்களில் மாத்திரம் நடித்ததும் உண்டு. உதாரணம் : மாலி.

மேலும் பிற ஆளுமைகளை வரும் பதிவுகளில் காண்போம்

நன்றியுடன்        அன்பன் ராமன்          மதுரை.