Forum

எம்எஸ்வி – 2 இசையும் காலமும்  

  RSS

palaniappansubbu
(@palaniappansubbu)
Active Member
Joined: 5 months ago
Posts: 6
17/05/2019 3:28 pm  

முதலில் சொன்னதுபோல், ஒரு ராகத்தின் ஸ்வரூபத்தில் நிற்பதும், அந்த ராகத்தைத் தெளிவாக நிறுவுவதும்தான் செவ்விசையின் முக்கியமான தேவை. அந்த ராகத்தின் வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தவும் சாகித்யகர்த்தா முயற்சிப்பார். திரையில் தோன்றும் காட்சி பார்வையாளர் மனதில் எழுப்பக்கூடிய உணர்ச்சிதான் திரையிசைக்கு மையம், அதன்பின்தான் ராக வியாபகம் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால்தான் ராக இலக்கணத்தில் இல்லாத சுவரங்களை திரை இசையமைப்பாளர் சேர்த்துக்கொள்ள முடிகிறது. இது தவிர ஒரு ராகத்தின் அத்தனை இயல்புகளையும் வெளிப்படுத்த வேண்டிய தேவை திரையிசையமைப்பாளருக்கு இல்லை. காட்சிக்குத் தேவைப்பட்ட உணர்வை வெளிப்படுத்தினால் போதும்.

விளங்கிக் கொள்ள, ஐம்பதுகளில் வெளியான தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களைப் பார்த்தால் இவற்றுக்கு இடையிலான வேறுபாடு புலப்படும்.

உத்தம புத்திரன்” படத்தில் ஜி ராமநாதன் இசையமைத்த “முல்லை மலர் மேலே” என்ற பாடலை முழுதாகக் கேட்டுப் பார்க்கலாம்- கானடா ராகத்தில் அமைந்த பாடல் இது.

மிக அருமையான கானடா என்பதில் சந்தேகமேயில்லை, ஆனால் இசையமைப்பாளரைப் பொருத்தவரை, எல்லாவற்றுக்கும் மேலாக இது கானடா ராகத்தில் அமைந்த பாடல் என்பதுதான் முக்கியம். காதல் பாடல் என்பது இரண்டாம்பட்சம்தான். சரணத்தில், “மின்னல் உருமாறி மண் மேலே” என்பதன் ஆரோகணத்தை டிஎம்எஸ் எப்படி பாடுகிறார் என்பதை கவனித்துப் பாருங்கள். கானடா ராகத்தை ஜி ராமநாதன் நேசிப்பது நன்றாகத் தெரிகிறது. பாடகர் டிஎம்எஸ்ஸின் திறமை முழுமையாக வெளிப்பட வேண்டும் என்று  விரும்புகிறார் அவர், குறிப்பாக உச்ச ஸ்தாயியில் அவர் பாடுவதன் அழகை இந்தப் பாடலில் நன்றாகக் கொண்டு வருகிறார்  ஜி ராமநாதன். திரைப்படப் பாடல்களில் கானடா ராகத்தில் அமைந்த சிறந்த பாடல்கள் எவை என்று கேட்டால் உடனே இந்தப் பாடல் நினைவுக்கு வரக்கூடும். ஆனால், மிகச் சிறந்த காதல் பாடல் எது என்று கேட்டால், இது நினைவுக்கு வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

அல்லது ‘ஏரிக்கரையின் மேலே‘ – இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோம். பாடலின் இசையமைப்பாளர் கே வி மகாதேவன் ஆரபியின் அத்தனை அழகையும் பல்லவியிலேயே வாரியிறைக்க ஆசைப்படுகிறார். இந்தப் பாடலின் மெட்டின் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா என்று எதை எழுதினாலும் அது பக்திப் பாடலாகவே ஒலிக்கும். காட்சியின் உணர்ச்சியோடு பொருந்தாத பாடல் இது.

இதற்கு மாறாக, “ஷவுக்காரு” என்ற தெலுங்குப் படத்தில் வரும் பாடல்......

கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்தான் அது, ஆனால் அது செவ்வியல் தன்மையைவிட்டு அப்போதே விலகிவிட்டது (“முகத்தில் முகம் பார்க்கலாம்” என்ற பாடலை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்). திரையில் தோன்றும் பாத்திரத்தின் உணர்ச்சிகளுக்கு ஏற்றாற்போல் இந்தப் பாடலும் மென்மையாக ஒலிக்கிறது. மேலும், கண்டசாலா டிஎம்எஸ் மற்றும் சீர்காழியைவிடச் சிறந்த செவ்வியல் பாடகர் என்றில்லாவிட்டாலும், அவர்களுக்குச் சற்றும் சளைத்தவர் அல்ல, அவர்கள் அளவு செவ்வியல் இசையில் பயிற்சி உள்ளவர் என்பதையும் நினைத்துப் பாருங்கள். இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளரும் அவரே. இருந்தாலும் சரணங்களில் அவர் அடக்கி வாசிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. கல்யாணியின் முழு உருவம் வெளிப்படுவதில்லை. அவரது வேலை திரையில் தோன்றும் காட்சிக்கு தகுந்த இசையமைப்பதுதான், அதற்குத் தேவையான அளவில் மட்டும் கல்யாணி ராகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார். இது அறுபதுகளில் வந்த பாடல் என்று யாரிடமாவது சொன்னால் அதை உடனே நம்பிவிடுவார்கள்.

அடுத்தது, 1948ல் வந்த இந்திப் படம் – அநோகர் பியார். அனில் பிஸ்வாஸ் இசையமைத்த இந்தப் பாடல் இளம் லதா குரலில் ஒலிக்கிறது. இந்தி திரையிசையில் பல புதுமைகளைச் செய்வதவர் என்ற பெருமை அனில்-‘தா’வுக்கு உண்டு. குலாம் ஹைதருடன் இணைந்து அவர் இந்தித் திரை இசையை நவீனப்படுத்தியவர். இந்தப் பாடலில் லதாவின் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்களைப் பாருங்கள். இந்தப் பாடலுக்கு ஒரு செவ்வியல் அமைப்பு இருந்தாலும் திரைக்காட்சியின் உணர்ச்சியை வெளிப்படுத்துவதுதான் முக்கியம் என்றும், இது முழுக்க முழுக்க செவ்வியல் பாடலாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் அனில்தா எவ்வளவு கவனமாக இருக்கிறார் எனபதையும் பாருங்கள்.

அக்காலத்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களுக்கும் தமிழ் படங்களுக்கும் இடையே இருந்த வேறுபாட்டைத் தெளிவாகச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன் (மிகக் குறைவான பாடல்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் ஐம்பதுகளில் தமிழில் வந்த பாடல்களை கேட்டுப் பாருங்கள், நான் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும். உரத்த குரலில் பாடுவது, பாத்திரத்தின் உணர்ச்சியைவிட ராகத்துக்கு முக்கியம் தருவது, இதெல்லாம்தான் முக்கியம்.

இந்தச் சூழலில்தான் விஸ்வநாதன்- ராமமூர்த்தி பணியாற்றினார்கள். ராஜா அல்லது ரகுமான் போல் அவர்கள் மிக வேகமாக புகழின் உச்சியைத் தொடவில்லை. 52ல் அறிமுகம் ஆனாலும், பத்தாண்டுகளுக்குப பிறகே முதலிடம் பிடிக்க முடிந்தது. துவக்க காலத்தில் இவர்கள் இசையமைத்த படங்கள் பிற படங்கள் போல்தான் இருந்தன. ‘புதையல்‘ என்ற படம் 1957ல் வந்தது. அருமையான பாடல்கள், ஆனால் எல்லாம் ராமநாதனை நினவுபடுத்துகின்றன. “விண்ணோடும் முகிலோடும்” என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள் – ஜி. ராமநாதன் பாடல் என்றுதான் வெகுகாலம் நினைத்துக் கொண்டிருந்தேன் (சி எஸ் ஜெயராமன் பாடியதால் இப்படி நினைத்திருக்கலாம்)


ReplyQuote
RVS Mani
(@rvs-mani)
New Member
Joined: 7 months ago
Posts: 3
22/07/2019 4:58 pm  

முற்றிலும் உண்மை. சினிமா இசை என்பது ஒரு தனி துறை. உணர்ச்சி பாவங்களை வைத்துத்தான் ராகமும் ஸ்வரமும். பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு ஊறிப்போன கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை இதிலிருந்து மாறி பாவத்துக்கும்,உணர்ச்சிக்கும் தான் நான் மெட்டமைக்கிறேன். பேசும் பொழுது எந்த உணர்ச்சி தனில் , எந்த ஏற்ற இறக்கங்களை தங்கள் குரலில் சப்தமாக வெளிப்படுத்துகிறார்களோ, அந்த நிலைக்கு நானும் மாறிக்கொண்டு ஸ்வரஸ்தாபனம் செய்கிறேன். கவிதை வரிகளை தயைகூர்ந்து எதற்கு எழுதப்பட்டதோ அந்த உணர்ச்சிக்கேற்பகுரலை ஏற்றி இறக்கி பேசுங்கள். வார்த்தைகளின் பாவம் வெளிப்படுகிறதா. அதை நங்கூரமாக்கி  ஒவ்வோர் வார்த்தை சப்த நிலைக்கும் அப்படியே சங்கீதஸ்வரம் உருவாக்குகிறேன். வாய்மூலம் நாம் வெறுமனேபேசிக்கொடுக்கும் உணர்ச்சி இசைஸ்வரமாக மாற்றபடுகிறது. அங்கே மடியான-முழு-ராகங்களுக்கு இடமிருக்காது. நவரசங்கள் முக்கியம் என்று எனக்குப் படுகிறது..,என்று மன்னர் கூறலாம். ஏன் கூறுவார். தயை கூர்ந்து ஏதாவது ஒரு மன்னர் பாட்டை "பேசி"ப் பாருங்கள்.அதே உணர்ச்சி ஸவரமாகிறது. அந்தக் கால  மைக்கில்லாத மேடை நாடகங்கள் கொடுத்த பேசியும் பாடியும் நடிக்கும் போது இந்த மாதிரி அமைத்தனர் என்று தெரிகிறது. அப்பொழுது செய்த விவரம் ஓரளவே.என் எண்ண வெளிப்பாடு தவறென்றால் பொறுத்தருளவும். ஆனாலும் சொல்கிறேன் நிறைய மன்னர் பாடல்களை நான் பேசிப் பாடியுள்ளேன். அமைத்த ஸ்வரங்கள் பேச்சின் ஸ்வரூபத்தை உணர்ச்சியைத்தாண்ட வில்லை. மஜா, லூட்டி பாடல்களை விடுங்கள். 

 


ReplyQuote
RVS Mani
(@rvs-mani)
New Member
Joined: 7 months ago
Posts: 3
22/07/2019 5:03 pm  

மிக மிக சரியாகக் கணிக்கின்ற திரு. பழனியப்பன் சுப்பு அவர்களுக்கு என் உளம்கனிந்த நன்றி. திரு.சுப்பு வாழ்க. 

 


ReplyQuote
RVS Mani
(@rvs-mani)
New Member
Joined: 7 months ago
Posts: 3
22/07/2019 5:10 pm  

மேலும் இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாக்கத்தில்  பக்கா"வான ஸ்வரங்கள் கிடைப்பது மிக மிக அபூர்வம். நம் மன்னருக்கு சாதாரணமாக கிடைத்திருக்கிறது. 

 


ReplyQuote
Share:
  
Working

Please Login or Register