அது நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம்."புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே" என்று இருந்த காலம். எம்.எஸ்.வி. - கே.வி. மகாதேவன் என்ற இரு ஜாம்பவான்களின் இசைச் சுரங்கங்கள் அள்ளித்தெறித்த வைரங்களின் ஜாஜ்வாலயத்தில் மனசைப் பறிகொடுத்திருந்த நேரம். பள்ளிக்கூட டைம்-டேபிள் கூட சரியாக நினைவில் இருக்காது. ஆனால் அகில இந்திய வானொலி நிலையத்தின் "திரை கான" நேரங்கள் அத்துப்படி. அதிலும் விடுமுறை நாட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு பண்டிகைக்கும் அதுசம்பந்தமான பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பாகும். தீபாவளி என்றால் - "உன்னைக் கண்டு நான் ஆட" பொங்கல் பண்டிகைக்கு - "தை பிறந்தால் வழி பிறக்கும்" கிறிஸ்துமஸ் நாளில் - "அருள் தாரும் தேவமாதாவே" ரம்ஜான் பண்டிகை அன்று "எல்லோரும் கொண்டாடுவோம்" இப்படி.. ஆனால் ஒரே ஒரு பண்டிகை தினத்தன்று மட்டும் பொதுவான பக்திப்பாடல்கள் தான் போடுவார்கள். அதுதான் "விநாயகர் சதுர்த்தி". ஏனென்றால் நமது தமிழ்ப் படங்களில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப் படுவதுபோன்ற காட்சி அமைப்புகள் இல்லாததுதான். அது ஒரு பெரிய குறையாகவே எனக்கு அப்போது தோன்றியது. அந்தக் குறையை நீக்கி வைத்த பெருமை நமது மெல்லிசை மன்னரையே சேரும். 1972-ஆம் வருடம் அவரது இசை அமைப்பில் வெளிவந்த "நம்ம குழந்தைகள்" படத்தில் டைட்டில் காட்சி விநாயகர் பாடலோடு வெளிவந்தது. அதுவும் - ஒரு கண்ணதாசனோ, வாலியோ, மருதகாசியோ எழுதிய பாடல் அல்ல. பன்னிரண்டாம் நூற்றாண்டில் அவ்வையார் எழுதிய எழுபத்திரண்டு அடிப் பாடலான "விநாயகர் அகவல்". இந்த விநாயகர் அகவலை ஒரு கே.வி.எம்.மோ - இசைச் சக்ரவர்த்தி ஜீ.ராமநாதனோ மெட்டுப்போட்டிருந்தால் அது அதிசயம் அல்ல. ஏனென்றால் அவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் நமது மெல்லிசை மன்னரோ பிறப்பால் மலையாள தேசத்தவர். அவர் இந்தப் பன்னிரண்டாம் நூற்றாண்டு தமிழ்ப் பாடலை பொருளை உணர்ந்துகொண்டு சிறப்பாக.. அல்ல. அல்ல. மிகச்சிறப்பாக இசை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் என்றால் தமிழும் இசையும் ரத்தத்தோடு கலந்த ஒருவரால் மட்டுமே அது சாத்தியமாக முடியும். சாதாரணமாக ஒரு சினிமாப் பாடல் என்றால் பல்லவி, இரண்டு சரணங்கள் - அதிக பட்சமாக மூன்று சரணங்கள் வரைதான் இருக்கும். இந்த விநாயகர் அகவலோ மொத்தம் 72 வரிகள். நமது உடலில் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களின் இயக்கங்களை உள்ளடக்கிய நுட்பமானக் கருத்துச் செறிவு கொண்டது. அதனை ஆறு ராகங்களைக் கையாண்டு அற்புதமான ஒரு ராகமாலிகையாக மெல்லிசை மன்னர் கொடுத்திருக்கிறார். நாட்டை, கல்யாணி, ஸஹானா, ஷண்முகப்ரியா, காபி, மத்யமாவதி என்ற ஆறு ராகங்களைக் கையாண்டு அற்புதமாக வடிவமைத்து "இசை மணி" சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். அஞ்சலி ஆகியோரைப் பாடவைத்து இன்றைக்கும் விநாயகர் சதுர்த்தி என்றால் வானொலியில் தவறாமல் ஒளிபரப்பக் கூடிய காலத்தை வென்று நிற்கும் ஒரு பாடலாக மெல்லிசை மன்னர் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறா எடுத்த எடுப்பிலேயே சங்கீதம் பயில்பவர்கள் முதலில் சொல்வது ஸ, ப, ஸா" என்ற மூன்று ஸ்வரங்களைத்தான். அதே பாணியில் ஓம். ஓம்.. ஓம்.." என்று மூன்று முறை ஓம்காரநாதம் .. தொடர்ந்து தாள வாத்தியத்தில் ஒரு சிறு பிட். தொடர்ந்து "சீதக் களப செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பும்" என்று சீர்காழி அவர்கள் கம்பீரமாக இசைக்க - பின்னணியில் மறைந்திருந்த இயக்குபவர் நமது மெல்லிசை மன்னர். ஒவ்வொரு ராகமாக மாறும் இடங்களில் அவர் அனாயாசமாகக் கையாளும் லாவகம் இணைப்பிசையிலேயே ராகத்தைத் துல்லியமாகக் காட்டும் நயம். மதி நுட்பம்.. கேட்கக் கேட்கத் தெவிட்டாத கானம் அல்லவா இது? "எல்லை இல்லா ஆனந்தம் அளித்து" என்று தொடங்கும்போதே ஆனந்த அலைகள் கேட்பவர் மனதிலும் பரவும் வண்ணம் உற்சாகமாக மத்யமாவதியை நடை போடவைப்பார் மெல்லிசை மன்னர். முடிக்கும்போது "வித்தக விநாயகா விரைகழல் சரணே" என்ற வரிகள் வரும்போது விநாயகா என்ற வார்த்தையை உச்சத்தில் ஏற்றி "சரணே, சரணே, சரணே," என்று மூன்று முறை விநாயகரின் பாதத்தில் சிரம் குவித்து தலை வணங்குவது போல பாடலை முடித்திருப்பார். இந்தப் பாடல் பதிவுக்குப் பிறகு சீர்காழி அவர்கள் எந்த ஒரு கச்சேரியானாலும் , அது கோவில் கச்சேரியானாலும், கல்யாணக் கச்சேரியானாலும் சரி. பொதுவாகவே அவர் அதை இரண்டு பிரிவாகப் பிரித்துக் கொள்வார். ஆரம்பத்தில் கர்நாடக இசை பத்ததியில் ஒரு வர்ணம், விநாயகர் மேல் ஒரு பாடல், ஒரு துரித காலப் பாடல், மெயின் ராகம், கீர்த்தனம், ஸ்வரக்கோர்வைகள், அதன் பிறகு தனி ஆவர்த்தனம் இதற்குப் பிறகு - திரைப்படப்படப்பாடல்களைப் பாட ஆரம்பிப்பார். இதுதான் அவர் வழக்கமாக கச்சேரி செய்யும் முறை. அப்படி திரைப்பாடல்களை பாட ஆரம்பிக்கும் முன்பாக முதலில் இந்த விநாயகர் அகவலைப் பாடிவிட்டுத்தான் மற்ற பாடல்களை பாட ஆரம்பிப்பார். மெல்லிசை மன்னரின் மொழி ஆளுமைக்கும் இசைத்திறமைக்கும் இந்தப் பிள்ளையார் சுழி ஒன்றே போதுமே.. (ரசனை தொடரும்...) |
|
|