Forum

பின்னணி இசையிலும் முன்னணி மன்னர் - 1  

  RSS

P.G.S. MANIAN
(@manian)
Eminent Member
Joined: 5 months ago
Posts: 36
28/04/2019 9:30 pm  

ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை இசை அமைப்பாளருக்குச் சவாலான - கூடுதல் கவனத்தை ஈர்க்கக்கூடிய விஷயம் என்ன?

பாடல்களுக்கு - மக்களின் மனத்தைக் கவரும் வண்ணம் - திரும்பத் திரும்பக் கேட்கும் வண்ணம் இசை அமைப்பது என்பது ஒன்று.

அதைவிடக் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய அம்சம் காட்சிக்குத் தகுந்த மாதிரி பின்னணி இசை சேர்ப்பது.

கதைக்கேற்ற காட்சிக்களனை இயக்குனர் அமைத்திருப்பார். அந்தக் காட்சியில் நடிக/நடிகையர் வெளிப்படுத்தும் உணர்ச்சி வெளிப்பாட்டினை தனது இசையால் கூடுதலாக மெருகேற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது இசையமைப்பாளருக்குக் கூடுதல் கவனம் தேவைப்படும் பணி.

இது மட்டும் சரியாக அமையாவிட்டால்...? அவ்வளவுதான்..

காட்சி அமைப்பே எடுபடாமல் போய்விடும். அதற்காக எல்லாக் காட்சியிலும் ஒரே இரைச்சலாக இருக்கவும் கூடாது.

காட்சிக்கு ஏற்றபடி - அமைதி, ஆரவாரம், வீரம், கருணை, ஹாஸ்யம் என்று பின்னணி இசையாலும் தாக்கத்தை கச்சிதமாக வெளிப்படுத்த வேண்டிய கடமை இசையமைப்பாளருக்கு உண்டு.

மிகுந்த கவனமும், ஆழமான இசையறிவு இருந்தால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய விஷயம் இது.

அப்படிப் பின்னணி இசையமைப்பதில் முன்னணியில் இருப்பவர்....

வேறு யார்?

நமது மெல்லிசை மன்னர்தான்.

காட்சி ஏற்படுத்தும் அதிர்வுகளைத் தனது இசையால் அப்படியே படம் பார்ப்பவர்களின் மனங்களுக்குக் கடத்துவதில் எம்.எஸ்.வி. அவர்களை மிஞ்ச யாருமே பிறக்கவில்லை... இன்று வரை.

அவற்றில் சிலவற்றை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
***
"
பஞ்சவர்ணக் கிளி" - 1965ஆம் ஆண்டு மெல்லிசை மன்னர்களின் இசையில் வெளிவந்த படம்.

கதாநாயகி என்றால் இப்போது இருப்பது போல சும்மா ஒன்று இரண்டு காட்சிகளில் தோன்றி டூயட் பாடிவிட்டு க்ளைமாக்ஸில் கதாநாயகனின் கரம் பற்றிச் சிரிப்பதுதான் - என்றாகி விட்ட இந்தக் காலகட்டத்தினருக்கு -

"புன்னகை அரசி" கே.ஆர். விஜயாவின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான இந்தப் படத்தில் அவரது நடிப்புத் திறமை பிரமிக்கவைக்கும்.

முழுப் படத்தையும் தனி ஒருத்தியாக தோளில் தூக்கிச் சுமக்க வேண்டிய கதை அமைப்பு.

அவருக்கு பேருதவியாக - பக்கபலமாக - இருந்தது மெல்லிசை மன்னரின் இசை என்றால் அது மிகையே அல்ல.

அந்த நாட்களில் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கியமான முதற்காரணியாக இருந்தவர்கள் தாய்க்குலம் தான்.

எவ்வளவுக்கு எவ்வளவு அவர்கள் படம் பார்த்துவிட்டு அழுத கண்ணும், சிந்திய மூக்கும், சிவந்த கண்களுமாக அரங்கை விட்டு வெளியே வருகிறார்களோ அதை வைத்துத்தான் படத்தின் வெற்றியே தீர்மானிக்கப்படும்.

"காசையும் கொடுத்துட்டு இப்படி அழுது குளிச்சிட்டு வரணுமா?' என்று வீட்டு ஆண்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் அளவுக்கு அன்றைய படங்கள் இருந்தன.

இல்லாவிட்டால் ஒரு பாசமலரும், பாகப்பிரிவினையும், பாலும் பழமும் இப்படி மகத்தான வெற்றிப்படங்களாகி இருக்க முடியுமா என்ன?

அந்த வகையில் திரை உலகில் நுழைந்து வளர்ந்து வந்த ஆரம்ப காலத்திலேயே கே.ஆர். விஜயா அவர்களின் திறமைக்குச் சவாலாக அமைந்த படம்தான் "பஞ்சவர்ணக்கிளி".

பாடல்களை பொறுத்தவரையில் ... சொல்லவே வேண்டாம்.

மெல்லிசை மன்னர்களின் இசைச் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்த படம் இது.

"அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்."
"
தமிழுக்கும் அமுதென்று பேர்"
"
அவளுக்கும் தமிழென்று பேர்|
"
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்"

என்று அனைத்துப்பாடல்களும் இன்றளவும் இசை வானில் துருவ நட்சத்திரங்களாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றனவே.

(அவற்றைப் பற்றித் தனியாகப் பார்ப்போம்..)

இங்கு நான் குறிப்பிடப்போவது இந்தப் படத்திற்கு நமது மெல்லிசை மன்னர் அமைத்திருக்கும் காட்சிக்கேற்ற பின்னணி இசையைப் பற்றி!

இடியாப்பச் சிக்கலான - முடிச்சுக்கள் நிறைந்த - குடும்பக் கதை. கதாநாயகியைச் சுற்றியே அமைக்கப்பட்ட கதை.

நான் குறிப்பிடப்போகும் காட்சி அமைப்பைக் காணும் முன்னால் - கதைச் சூழலை சற்றுச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

கதாநாயகி வாணி.. ஒரு பாடகி. அவள் குரலை மட்டுமே கேட்டு அவளிடம் காதல் கொள்கிறான் கண்ணன். அவனது வீட்டிலேயே இருக்கும் முறைப்பெண் மேகலா ராணுவத்தில் பணிபுரியும் அவனது அண்ணன் சேகருக்காக நிச்சயம் செய்யுப்பட்டிருப்பவள்.

சேகரோ .. வாணியின் சகோதரியான சித்ராவை ஏற்கனேவே மனம் செய்துகொண்டு டில்லியில் வசித்து வருகிறான். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு.

சேகரைப்போலவே உருவ ஒற்றுமை கொண்ட பாலு என்ற அயோக்கியன் வாணியை அடையத் துடிப்பவன்.

வானியைப் பெண்பார்க்க வரவிருக்கும் கண்ணனின் வீட்டினருக்குத் தானும் வாணியும் ஒன்றாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை அனுப்பி வைக்கிறான் பாலு.

அதே சமயம் போர்முனைக்கு செல்லவிருக்கும் சேகர் தனக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கும் விபரத்தைத் தெரிவித்து தனக்கு போர்முனையில் ஏதாவது ஒன்று நேர்ந்துவிட்டால் தனது மனைவியையும் குழந்தையும் கவனித்துக்கொள்ளவேண்டியது தனது பெற்றோரின் பொறுப்பு என்று தெரிவித்து எழுதிய கடிதமும் அவர்கள் கைக்கு வந்து சேர, வாணியை சித்ரா என்று அவர்கள் நினைக்க நேரிடுகிறது.

அதே நேரம் மாறு வேடத்தில் வந்த பாலு வாணியின் நடத்தையைப் பற்றி அவதூறாகப் பேச, அதை உண்மை என்று நம்பிய கண்ணனின் தந்தை பெண்பார்க்கப் போவதையே நிறுத்திவிடுகிறார்.

தாயைப் பறிகொடுத்த வாணி - பாலுவிடமிருந்து தப்பிக்க தனது சகோதரி சித்ராவின் வீட்டுக்கு வந்து விடுகிறாள்.

சேகர் போர்முனையில் வீரமரணம் அடைந்துவிட்டதாக வந்த செய்தி சித்ராவை மரணமடையச் செய்துவிடுகிறது.

இறப்பதற்கு முன்னால் தனது குழந்தையை சேகரின் பெற்றோரிடம் சேர்த்துவிடும் பொறுப்பை வாணியிடம் ஒப்படைத்துவிட்டு அவள் இறந்துவிட..

குழந்தையை எடுத்துக்கொண்டு வரும் வாணியைச் சித்ரா என்று அவர்கள் தவறாக நினைத்துவிட...

திருமணமாகாமலேயே ஒரு விதவையாக - அதுவும் தன்னை நேசிக்கும் கண்ணனின் - அண்ணியாக வாழ வேண்டிய சூழ்நிலை வாணிக்கு ஏற்பட்டுவிடுகிறது.

அயோக்கியன் பாலு உருவ ஒற்றுமையைப் பயன்படுத்திக்கொண்டு சேகர் மீண்டு வந்தது போல அனைவரையும் நம்பவைத்து விடுகிறான்.

சித்ராவாக தாங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் வாணியை அலங்கரித்து மாடியில் இருக்கும் சேகரின் அறைக்கு மேகலாவும், சேகரின் தாயும் அனுப்பி வைக்கிறார்கள்.

மேலே அவளை அடையக் காத்திருக்கும் மனித மிருகம் ..
கீழே தவிப்போடு படி ஏறும் வாணி.

இதுதான் காட்சி.

வாணியின் தவிப்பையும் படபடப்பையும் படம் பார்ப்பவர் மனங்களுக்கு பின்னணி இசையால் ஏற்படுத்த வேண்டும்.

ஏற்படுத்தி விட்டிருக்கிறார் நமது மெல்லிசை மன்னர்.

சமீபத்தில் பொதிகைத் தொலைக்காட்சியில் படத்தைப் பார்த்தபோது குறிப்பிட்ட இந்தக் காட்சியில் மெல்லிசை மன்னரின் இசை மனத்தில் ஏற்படுத்திய பிரமிப்பு நீங்க வெகு நேரமாயிற்று.

கீழே குழந்தை உறங்கும் தொட்டிலில் அருகில் அலங்கரிக்கப்பட்ட சிற்பமாக வாணி நின்று கொண்டிருக்கும் காட்சியிலிருந்து ஆரம்பமாகிறது மெல்லிசை மன்னரின் பின்னணி இசைக் கோர்வை.

இந்த காட்சிக்கு அவர் பயன்படுத்தி இருக்கும் வாத்தியங்கள் ஷெனாய், வயலின், சித்தார், அடிநாதமாக ஒரே ஒரு மீட்டலுக்காக கிடார் மற்றும் தபேலா,

ஆரம்பத்தில் மெல்ல அடிநாதமாக ஷெனாயில் ஆரம்பிக்கும் ஹம்சா நந்தி ராகம் சோகச் சிற்பமாக நின்று கொண்டிருக்கும் வாணியின் மனநிலையை ஒரே ஒரு பிரயோகத்தில் வெளிப்படுத்தி நின்று விடுகிறது.

இப்போது வசனம் :

"சரியாப்போச்சு. இப்படி குழந்தை கண்ணன் கிட்டே நின்னுகிட்டு இருக்கவா நான் உங்களுக்கு இப்படி அலங்காரம் பண்ணி விட்டிருக்கேன் அண்ணி. மேலே அத்தான் தனியா இருக்கார். நீங்க மாடிக்குப் போங்க." என்று மேகலா கூற, அங்கே வந்த சேகரின் தாயும், "ஆமாம் சித்ரா. குழந்தையை நாங்க பார்த்துக்குறோம். நீ மாடிக்குப் போம்மா," என்று பால் டம்ளரை ஒரு தட்டில் வைத்து வாணியிடம் கொடுக்க...

வாங்கிக்கொண்டு நகரும் வாணி மாடிப்படியை நெருங்க.. படியேறும் சமயம் தபேலாவின் தாளக்கட்டோடு சேர்ந்து ஷெனாய் ஹம்சானந்தி ராகத்தை மேல் நோக்கி ஆரோகணத்தில் சஞ்சரிக்க வைக்க.. ஒவ்வொரு படியாக ஏறும் வாணி தயங்கி நிற்கும் இடத்தில் வயலின் ராகத்தை நிறுத்த... ஒரு மாத்திரை கால அளவையில் மீண்டும் ஷெனாயின் மேல்கால சஞ்சாரம்.. அது மேலே உச்ச ஸ்வரத்தை எட்டும்போது அப்படியே நிறுத்தி வைக்கும் வயலின்.. இடையில் சித்தாரின் மீட்டல்..

மாடிப்படியில் திருப்பத்தில் வாணி அதீதப் படபடப்பில் மயங்கிச் சரிவதோடு பின்னணி இசை முடிகிறது.

சிறிய காட்சி தான்.. ஆனால் இதற்காக மெல்லிசை மன்னர் கையாண்டிருக்கும் ஹம்சா நந்தி ராகப் பிரயோகம் இருக்கிறதே.. அது பிரமிக்க வைக்கும் பிரவாகம்

இதோ அந்த காட்சிக்கான link

https://youtu.be/GOqwiQ-s1MY

படம் என்னவோ தோல்விப் படம்தான்.

ஆனால்.. நமது மெல்லிசை மன்னரின் இசை தோற்காத இசை.

இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கும் படத்தின் பாடல்களே அதற்கு சாட்சி.

(ரசனை தொடரும்..)

This topic was modified 4 months ago 3 times by MMFA

ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 104
28/04/2019 10:17 pm  

அருமை திரு மணியன் சார். இதே காட்சியை முன்பு ஒருமுறை பின்னிசைப் பிதாமகன் என்ற தொடரில் ரசித்து எழுதியிருந்தேன். என்றாலும் தங்களுடைய கண்ணோட்டத்திலும் பரிமாணத்திலும் இது புதிய விளக்கங்களைத் தருகிறது.

பாராட்டுக்கள்.


ReplyQuote
P.G.S. MANIAN
(@manian)
Eminent Member
Joined: 5 months ago
Posts: 36
29/04/2019 9:13 am  

All the credit goes to Mellisai Mannar.   Thank you for your complements Mr. Veeyaar Sir.


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 50
29/04/2019 9:27 am  
திரு veeyaar 
உங்களது பழைய பதிவினை இங்கு பதிவு நாங்கள் படிக்க உதவும் அல்லவா. அதன் காணொளி இருந்தாலும்n

best Regards
vk


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 50
29/04/2019 9:35 am  

மிக அருமை திரு மணி. என்னைப் போன்ற பாமரர்கள் மனதில் மெல்லிசை மன்ன ரின் அசாத்திய திறமையை பதிவு செய்ய ஒருவராக veeyaar அவதி பட்டார் இப்பொழுது அவர் சந்தோஷம் அடைவார். Wonderful write up 

best Regards
vk


ReplyQuote
sravi
(@sravi)
Eminent Member
Joined: 4 months ago
Posts: 30
11/05/2019 6:16 pm  

சார்,

அற்புதமான விவரிப்பு.

நன்றி.


ReplyQuote
sravi
(@sravi)
Eminent Member
Joined: 4 months ago
Posts: 30
11/05/2019 7:14 pm  

 

 

இயக்குனர் பாலச்சந்தர் வசனமின்றி பின்னணி இசையை வைத்தே ஒரு உச்சகட்ட காட்சியை அமைக்க திட்டமிட்டு

அதை மன்னரிடமும் ஒப்படைத்து விட்டார்.

படக் காட்சியின் ஆறாவது நிமிடம் தொட்டு மன்னர் காட்டிய சாகசம்.

குறிப்பிட்ட காட்சியை மட்டும் வெட்டி வைத்தாலும் இதில் இணைக்க தொழில் நுட்ப அறிவு இல்லாததால்

முழு காட்சியை ஏற்றி உள்ளேன்.

சிரமத்தைப் பொறுத்தருள்க

https://www.youtube.com/watch?v=nKHNaXukZMI


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 50
21/07/2019 10:14 am  

நண்பர் ரவி கூறிய அந்தக் காட்சினை பதிவு செய்யும் வாய்ப்பு எனக்கு கிட்டியது
அதோ இங்கு 1970 களில் ஆரம்பத்தில் பின்னணி இசைக்காகப் பெரிதும் பேசப்பட்ட ஒரு காட்சி
அவள் ஒரு தொடர்கதை இறுதிக் காட்சி 
அந்த காட்சியைப் பற்றிப் பேசுகிறார்கள் அந்தக் காட்சியினை உருவாக்கியவர்கள் இருவர் மெல்லிசை மன்னரும் இயக்குனர் சிகரமும்://youtu.be/942ht8AYURg

best Regards
vk


ReplyQuote
sravi
(@sravi)
Eminent Member
Joined: 4 months ago
Posts: 30
12/08/2019 6:10 am  

Thank You Sir


ReplyQuote
Share:
  
Working

Please Login or Register