Forum

1975 - Mannavan Vandhanadi - Kadhal Rajiyam Enadhu  

  RSS

Parthavi
(@parthavi)
Member Moderator
Joined: 6 months ago
Posts: 5
03/08/2019 11:45 pm  

காதல் ராஜ்ஜியம் எனது - மன்னவன் வந்தானடி - 1975

மெல்லிசை மன்னரின் அயர வைக்கும் மெலடிகளில் இந்தப் பாடலும் ஒன்று. சிவாஜி குதிரை மீது அமர்ந்திருக்க, குதிரை நடந்து செல்வதால் (பக்கத்தில் நடந்து வரும் மஞ்சுளாவின் வேகத்துக்கு!), குதிரையின் குளம்படி ஒசை மெதுவாக ஒலிக்கும் லயத்துடன் பாடல் துவங்குகிறது. குளம்படி லயம் பல்லவியுடன் முடிந்து, பிறகு தபலா ஆதிக்கம் பெறுகிறது. காட்சியமைப்பில் குதிரை மீது வரும் காட்சி பல்லவியுடன் முடிந்து விடுவதால் இவ்வாறு அமைத்திருக்கிறார் எம் எஸ் வி என்று கொள்ளலாம்.

ஒரு பாடலுக்கு இசை அமைக்கு முன் பாடல் காட்சி அமைப்பு பற்றி இயக்குனரிடம் விரிவாகக் கேட்டு அறிந்து கொள்ளும் பழக்கம் மன்னருக்கு இருந்ததால், பல பாடல் காட்சிகள் ரீரிகார்டிங் போல் அமைந்திருப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன். இதற்கு இன்னொரு உதாரணம் இந்தப் பாடலிலேயே இருக்கிறது. முதல் prelude துவங்கும்போது மஞ்சுளா சில விநாடிகள் பரத நாட்டியம் ஆடுகிறார். அப்போது interludeஇல் நாட்டிய இசை ஒலிக்கிறது! அவர் நாட்டியம் முடிந்ததும் interlude வயலின் இசைக்கு மாறுகிறது.

சரணத்தில், 'திங்கள் ஒரு கண்ணில்.." என்ற முதல் சற்றுக் குறைந்த pitchஇல் துவங்கி 'தாலாட்டும் பெண்மை இது' என்ற high pitchஇல் முடிகிறது. இரண்டாவது வரி, 'வைகை மலர்ப் பொய்கை" என்று high pitchஇல் துவங்கி, 'நீராட்டும் நேரம்' என்று low pitchஇல் முடிகிறது. காதல் பாடலின் வரிகளை high pitchஇல் கேட்பதும் ஒரு சுகமான இனிமைதான்!

முற்றிலும் வேறு தளத்தில் அமைந்த சரணத்தை எப்படிப் பல்லவியுடன் இணைப்பது? சரணத்தின் மூன்றாவது வரியான 'தென் பாண்டித் தேவனின் அணைப்பு' அனுபல்லவியின் முதல் வரியான 'கண்ணான கண்மணி வனப்பு' அமைந்த அதே மெட்டில் அமைந்திருப்பதைக் காணலாம். இதன் மூலம், high pitchஇல் வேறொரு தளத்தில் அமைந்த சரணத்தை 'அனுபல்லவி ரூட்'டில் சென்று பல்லவியுடன் இணைக்கிறார் இந்த வித்தகர்!

இரண்டாவது சரணத்துக்கு முந்தைய interludeஐ, முதல் interludeஇலிருந்து மிகவும் வேறுபட்ட விதத்தில் அனாயாசமான வீச்சுடன் அமைத்திருப்பது இந்தப் பாடலின் இசையமைப்பின்போது மன்னரின் கற்பனைத் திறன் உச்சத்தில் இருந்ததற்கு இன்னொரு எடுத்துக்காட்டு.

இது போன்ற குதிரைச் சவாரிப் பாடல்கள் சிலவற்றுடன் இதை ஒப்பிடும்போது, ஒற்றுமைகளும், வேறுபாடுகளும் மன்னரின் சிந்தனையையும், அணுகுமுறையையும் ஓரளவு புரிந்து கொள்ள நமக்கு உதவும்.

'அன்பே வா' படத்தில் இடம் பெற்ற 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' பாடலின் (1966) துவக்கத்தில் வரும் prelude, 'காதல் ராஜ்ஜியம்' பாடலின் prelude இரண்டும் சற்று ஒத்திருப்பதை கவனிக்கலாம். 'ராஜாவின் பார்வையில்,' துவக்கத்திலிருந்து வரும் குளம்பொலிப் பின்னணி இரண்டாவது சரணத்தின் துவக்கத்தில் தபலாவுக்கு மாறுகிறது. ஏனெனில் இப்போது காதலர்கள் சாரட்டிலிருந்து இறங்கி நடனமாடத் துவங்கி விடுகிறார்கள்!

இன்னொரு பாடல் 1963ஆம் ஆண்டு வெளியான 'நெஞ்சம் மறப்பதில்லை'யில் இடம் பெற்ற 'அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை.' இதில் குதிரை வண்டி சற்று வேகமாக ஓடுவதால், தாள கதி சற்று வேகமாக இருக்கும். பாடல் முழுவதிலுமே - பாடல் வரிகள், interlude, prelude எல்லாவற்றிலுமே ஒரு துரித கதியை (ஓட்டத்தை) நாம் காணலாம் (உணரலாம். - காணலாம் என்பதும் பொருத்தமாகத்தான் தோன்றுகிறது!). பாடல் முழுவதுமே குதிரை வண்டியில் சென்றபடி பாடப்படுவதால், குதிரையின் குளம்புச் சத்தமும், அதற்கு இசைவான லயமும் பாடல் முழுவதும் ஒலிக்கும். ஒரு சில இடங்களில் குளம்படிச் சத்தம் இல்லாதது போல் தோன்றினாலும், அதே லயத்தில் தாளம் தொடர்கிறது. நௌஷத் அவர்களின் இந்திப் பாடல் ஒன்றில் இது போன்ற குதிரை ஓட்டத்துக்கு இசைந்த லயத்தைக் கேட்டு அது போன்று அமைக்க வேண்டும் என்று விரும்பி, இந்தப் பாடலை அமைத்ததாக 'என்றும் எம் எஸ் வி' நிகழ்ச்சியில் மன்னர் சொல்லியிருக்கிறார்.

இன்னொரு பாடல் 'மன்னாதி மன்னன்' (1960) படத்தில் இடம் பெற்ற அச்சம் என்பது மடமையடா. (இந்தப் பாடல் youtubeஇல் கிட்டத்த்தட்ட 44 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது!) பாடலில் எம் ஜி ஆர் வேகமாகக் குதிரை வண்டியில் சென்றபடி பாடுகிறார். அதற்கேற்பப் பாடல் முழுவதும் குதிரைக் குளம்படிச் சத்தம் வேகமான கதியில் ஒலிக்கிறது. பாடலும் அதிவேகமாகச் செல்கிறது. 'அச்சம் என்பது மடமையடா' என்று மெதுவாகத் துவங்கி விட்டு, பிறகு குதிரை கிளம்பி வேகம் எடுப்பது போல் பாடலும் வேகம் எடுத்து ஒரே வேக கதியில் செல்கிறது.

இந்தப் பாடல்களில் எல்லாம் குளம்படிச் சத்தம் தவிர மற்ற தாளக் கருவிகள் எப்படிப் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன, அவை எந்த வகைத் தாளம் போன்றவற்றை இசை/தாள அறிவு கொண்டவர்கள் ஆராயலாம்.

அது போல் 'ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி,' 'பாரப்பா பழனியப்பா' போன்ற பாடல்களில் மாட்டு வண்டியின் ஓசையை மன்னர் எப்படிக் கையாண்டிருக்கிறார் என்றும் ஆராயலாம்.

'காதல் ராஜ்ஜியம் எனது' பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்

 

This topic was modified 2 weeks ago 2 times by Parthavi

ReplyQuote
Share:
  
Working

Please Login or Register