Forum

"கர்ணன்' படப்பாடல்-கள்- ஒரு கண்ணோட்டம் - பகுதி - 2  

  RSS

P.G.S. MANIAN
(@manian)
Eminent Member
Joined: 7 months ago
Posts: 36
20/05/2019 9:56 pm  

அரச சபையில் கர்ணன்.  அப்போது ஒரு புலவர் எழுந்து அவனது வள்ளல் தன்மையைப் பாடுகிறார்.

பாடல் ஆரம்பத்தில் வரும் சாரங்கி, புல்லாங்குழல், வயலின் ஆகியவற்றின் இணைவில் வரும் முகப்பிசையே "ஹிந்தோள" ராகத்தை காட்டிக்கொடுத்து நிறுத்த..

சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் கணீரென்று ஹிந்தோள ராக ஆலாபனையோடு விருத்தமாக - பாடல் துவங்குகிறது.   கச்சிதமான சங்கதிகள்..நேர்த்தியான வடிவமைப்போடு ஹிந்தோளம்.  இத்தனை கச்சிதமாக வேறு யாருமே ஹிந்தோளத்தை வடிவமைத்ததில்லை.

புவியில் பயிர் செழிக்க வான் மழை கொடையாக தண்ணீர் தருகிறது.  ஆனால் அதற்கும் ஒரு கால அளவு உண்டு.  வருடத்தில் இரண்டு மாதங்கள் தான் கார் காலம்.  அதாவது மழைக்காலம்.  அந்த இரண்டு மாதங்களோடு மழையின் கொடைத்தன்மை முடிவுக்கு வந்துவிடும்.  அதன் பிறகு அடுத்த மழைக்காலம் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

அடுத்து அந்த மழை வழங்கிய கொடையைப் பெற்று செழித்து வளர்ந்த வயல் பயிர் பச்சை, தானிய வகைகள் ஆகியவற்றை கொடையாகத் தருகிறது.   ஆனால் அப்படி வயல் கொடுக்கும் கொடைக்கும்  கால அளவு உண்டு.  அறுவடைக் காலம் தொடங்கி ஒரு மூன்று மாத காலம் தான் வயலால் கொடை வழங்க முடியும்.  அதன் பிறகு விதைப்பு துவங்கி, மழை வந்து செழித்து வளர்ந்த பிறகே அதனால் மறுபடி வழங்க முடியும். 

மழையால் பயிர்.   அந்தப் பயிரில் வளரும் புல்லையும்,வைக்கோலையும், நெல்லில் இருந்து அவித்து வரும் தவிட்டையும் உண்டு நமக்கு கொடையாக பாலை வழங்குகிறது பசு.

அந்தப் பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாத காலம் தான்.

தவிர அதற்கு பால் சுரக்கும் பருவம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.  அதன் பிறகு கருவுற்று கன்று பிறக்கும் வரை அதற்கு பால் சுரக்காது.  ஈன்ற கன்றைப் பார்த்த மாத்திரத்தில் அதற்கு பால் சுரக்கும்.  அதுவும் கூட நான்கு மாதம் தான். 

இப்படி மழை,  மழையால் பயிர்,  பயிரால் பசு.. என்று படிப்படியாக ஒன்றுக்கொன்று தொடர்போடு இருக்கும் மூன்றையும் அழகாக ஒன்று படுத்தி கவியரசர் ..கொடைத்தன்மையை விவரித்திருக்கும் அழகு.

அதற்கேற்றாற்போல மெல்லிசை மன்னரும் ஹிந்தோள ராகத்தை எவ்வளவு அழகாக நேர்த்தியாக படிப்படியாக ஏற்ற இறக்கங்களோடு லாவகமாகப் பவனி வரச் செய்திருக்கிறார்!

பயன் கருதாமல் கொடுப்பதில் இப்படி மழை, பயிர், பசு ஆகியவற்றின் கொடுக்கும் தன்மைக்கு கால அளவு உண்டு.

ஆனால் பாராளும் எங்கள் கர்ணனின் கொடுக்கும் தன்மைக்கோ கால நிர்ணயமே கிடையாது.  அவனுக்கு எல்லா நாளுமே மாதம் தான்.  நாள், கிழமை, நேரம், காலம் பார்க்காமல் யார் எப்பொழுது வந்து கேட்டாலும் வாரிக்கொடுப்பவன் அவன் என்று கவிஞர் இந்த சரணத்தை முடிக்கும்போது ..

"பார்த்திபனாம்  கர்ணனுக்கோ நாளும் மாதம்." - என்று மூன்றையும் விட உயரத்தில் கர்ணனை வைத்து முடிக்கிறார்.

அதற்கேற்றாற்போல மெல்லிசை மன்னரும் ஹிந்தோள ராகத்தை மேலேற்றி ..  நா..ஆ..ளும்.  மாதம் என்று சரணத்தை மேலே கொண்டுபோய் நிறுத்தி முடித்திருக்கும் நேர்த்தி..கன கச்சிதம்.. 

இந்தச் சரணத்தில் கவியரசர் "வேற்றுமை அணி" வகையைக் கையாண்டு அமைத்திருக்கிறார். 

ஒரே குணத்தில் இருக்கும் பொருட்களைத் தொடர்புபடுத்தி..  அதனோடு தனித்துக் காட்ட விரும்பும் மற்றொன்றை உயர்த்தி வேற்றுமைப் படுத்திக்காட்டும் அணி வகையே "வேற்றுமை அணி".  

அந்த வகையில் கொடுக்கும் தன்மை உள்ள மழை, வயல், பசு, கர்ணன் என்ற நால்வரையும் சொல்லி  மற்ற மூன்றை விடக் கர்ணனை உயர்த்தி வேறுபடுத்திச் சொல்லி இருக்குகிறார் கவியரசர்.

அந்த வேற்றுமை நயம் சிறப்பாக வெளிப்படும் வண்ணம் ஹிந்தோள ராகத்தை நமது மெல்லிசை மன்னர் கையாண்டிருக்கும் அழகு...  

வேறு  யாராலும் நினைத்தே பார்க்க முடியாத ஒன்று.

மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் -
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு  மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் ...........


ReplyQuote
P.G.S. MANIAN
(@manian)
Eminent Member
Joined: 7 months ago
Posts: 36
21/05/2019 10:22 am  

தொடர்ந்து வரும் வயலின்களின் விறுவிறுப்பான ஒற்றை வீச்சு. அடுத்து வரப்போகும் "தர்பாரி கானடா" ராகத்திற்குக் கட்டியம் கூறுகிறது.

இந்தச் சரணம் தமிழ் சினிமாவின் ஆரம்பகாலப் பின்னணிப் பாடகர் என்ற பெருமைக்குரிய "திருச்சி லோகநாதனின்" குரல் வளத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கர்ண மாமன்னன் திருக்கரங்களுக்கு ஒப்புவமை சொல்கிறார் கவியரசர்.

தலைவனைக் கண்டதும் ஏற்படும் நாணத்தால் சிவக்கிறது பெண்களின் கண்கள். 

கொடுக்கும் தன்மையுடைய மன்னனை தேடி நாடு தோறும் நடந்து நடந்து பாடும் புலவர்களின் கால்கள் சிவந்துவிட்டன.

உண்மையான மெய்ப்பொருளை தேடித் தேடி சிந்தித்து சிந்தித்து ஞானியரின் நெஞ்சங்கள் சிவந்து விட்டன.

(அதுபோல) கர்ண மாமன்னனின் திருக்கரம் தினம் தினம் கொடுத்து கொடுத்து தேய்ந்து சிவந்து விட்டிருக்கின்றன.- என்று பாடுகிறார்.

இந்தச் சரணத்தில் கவியரசர் கையாண்டிருக்கும் அணிவகை "எடுத்துக்காட்டு உவமை அணி".

"போல" என்ற உவமை உருபு வெளிப்படையாகத் தெரியாமல் மறைத்துக் கையாளும் அணிவகையே இது.

நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் - நாடு தோறும்
நடந்து சிவந்தன பாவலர் கால்கள் - நற்பொருளைத் 
தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம் - தினம் கொடுத்து
தேய்ந்து சிவந்தன கர்ண மாமன்னன் திருக்கரமே .

மெல்லிசை மன்னரின் தர்பாரி கானடா ராக சஞ்சாரங்கள் பிரமிக்க வைக்கின்றன.

இப்படிப்பட்ட கர்ணன் எப்படிக் கொடுக்கிறான்?

இதை மூன்றாவது சரணத்தில் மோகனமாகக் கவியரசர் அமைக்க, மோகன ராகத்தில் வெகு அற்புதமாக அதனை அமைத்து டி.எம்.எஸ். அவர்களின் கம்பீரக்குரலில் யாவரும் மோகம் கொள்ளும் வண்ணம் பாடவைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர்.

(ரசனை தொடரும்..)


ReplyQuote
P.G.S. MANIAN
(@manian)
Eminent Member
Joined: 7 months ago
Posts: 36
21/05/2019 10:23 am  

அடுத்து வரும் நான்காவது சரணம் அமைக்கப்பட்டிருக்கும் ராகம் "ஹம்சாநந்தி".

விறுவிறுப்பான வயலின்களின் வீச்சைத் தொடர்ந்து சாரங்கி "ஹம்சானந்தி"யின் சொரூபத்தை அப்படியே அழகான விறுப்பான சஞ்சாரத்தோடு காட்டி நிறுத்த நயமான பி.பி. ஸ்ரீநிவாஸின் குரல் செந்தேனாக இனிக்க வைக்கிறது.

அடுத்து வருபவருக்கு சந்தேகம். கர்ணனிடம் யாசகம் பெற வந்திருக்கிறோமே அவன் என்ன கொடுப்பானோ? எதை கொடுப்பானோ? - என்ற நினைக்க துவங்குகிறார். அப்படி அவர் நினைப்பதற்கு முன்னமேயே பொன்னையும்,பொருளையும் வாரி வாரிக் கொடுக்கிறான் கர்ணன். 
வந்தவருக்கோ மாபாரமாகப் பொன்னையும் பொருளையும் பெற்றும் ஆசை அடங்கவில்லை. இவை எல்லாம் போதாது, போதாது என்று தோன்றுகிறது.

நாமாக இருந்தால் "யோவ். பெரிசு. இவ்வளவு கொடுத்ததே பெரிசு. இன்னும் வேணுமா. போய்யா.போ. நீ ஒருத்தனே வாங்கிட்டு இருந்தா அடுத்தவங்களுக்கு கொடுக்க வேண்டாம். எல்லாத்தையும் உன் ஒருத்தனுக்கே வழிச்சு விட்டுட்டு என்னை ஓட்டாண்டியா உன்கூட வந்து நிக்க சொல்லுவே போல இருக்கே" என்று விரட்டுவோம்.

ஆனால் கர்ணனோ - சற்றும் சுளிக்காமல் இன்னும் கொடுப்பான்.

அதுவும் குறைவு என்று சொன்னார் என்றால் இருப்பது அனைத்தையும் கொடுத்துவிட்டு அனைத்துக்கும் மேலாக தன்னையே அவருக்கு கொடுப்பான். வேண்டும் என்றால் தன் உயிரைக்கூட தயங்காமல் கொடுக்கக் கூடிய தயாநிதி அவன்.

"என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணுமுன்னே
பொன் கொடுப்பான் பொருள் கொடுப்பான் போதாது போதாதென்றால் 
இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன்
தன்னைக் கொடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே.

சாதாரணமாக திரை இசையில் ஒரு பாடலின் ஆரம்பத்தை விருத்தமாக - அதாவது தொகையறாவாக - அமைத்துவிட்டு பிறகு தாள லயம் மிளிர பாடலாகத்தான் அமைப்பார்கள்.

ஆனால்.. ஒரு முழுப்பாடலையும் விருத்தமாகவே அமைக்கும் தைரியமும், துணிச்சலும் இரண்டே இரண்டு இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே இருந்திருக்கிறது. அதையும் அனைவரையும் கவரும் வண்ணம் அமைக்கும் திறமையும் இந்த இரண்டு இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே இருந்திருக்கிறது.

ஒருவர் - திரை இசைத்திலகம் கே.வி. மகாதேவன் அவர்கள். திருவிளையாடலின் "ஞானப் பழத்தைப் பிழிந்து" - மற்றும் கந்தன் கருணையில் "அரியது கேட்கின் தனி நெடுவேலோய்" பாடல்கள் .

இரண்டாமவர் - இதோ நமது மெல்லிசை மன்னர் இந்தக் கர்ணன் படப்பாடலில் தனது துணிச்சலை நிரூபித்துவிட்டிருக்கிறார்.

பாடல் இதோடு முடியவில்லை.   இன்னும் தொடர்கிறது.

(ரசனை தொடரும்..)


ReplyQuote
Share:
  
Working

Please Login or Register